குர்ஆன் 4:125 – இப்ராஹீம் அல்லாஹ்வின் நண்பன்(கலீலுல்லாஹ்) – இது அல்லாஹ்வின் இறையாண்மைக்
- TamilChristians Admins

- Nov 1, 2019
- 9 min read
முன்னுரை:
அல்லாஹ் இப்ராஹீமை தன் நண்பர் என்று குறிப்பிடுகின்றான். மனிதர்களில் நண்பர்கள் இருப்பார்கள், ஆனால் ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே நட்பு இருக்கமுடியுமா?
இது சாத்தியம் தானா?
மண்ணிலே பிறந்து அதே மண்ணுக்குள் சென்று மறைந்துவிடும் மனிதன் எங்கே? அவனை மண்ணால் படைத்து, உலகை ஆளும் இறைவன் எங்கே?
தவறுகளைச் செய்யும் மனிதன் எங்கே? அவனை நியாயத்தீர்ப்பில் நிறுத்தும் இறைவன் எங்கே!
மண் கட்டிக்கும், மாணிக்கத்துக்கும் நட்பு உண்டாகுமா? (உண்மையில், இறைவனை மாணிக்கத்துக்கு ஒப்பிடுவதும் தவறுதான்)
அல்லாஹ் “இப்ராஹீமை தன் நண்பனாக” ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறான்.
உமரின் கேள்விகள்:
அல்லாஹ் இப்ராஹீமை தன்னுடைய கலீல் (Khalil – நண்பன்) என்று அழைத்தது, அல்லாஹ்வின் இறையாண்மைக்கும், இலக்கணத்துக்கும் எதிரான செயல் அல்லவா?
மனிதன் தன்னை 'தந்தை' என்று அழைத்தால், அது இழுக்கு என்று கருதும் அல்லாஹ் எப்படி அதே மனிதனுக்கு அவன் 'நண்பனாக' முடியும்? இது தனக்கு இழுக்கு அல்லவா? அல்லாஹ்விற்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் உறவு தந்தை மகன் என்ற உறவாக இருக்கமுடியாது என்று அடித்துச் சொல்லும் குர்ஆன், எப்படி இவ்விருவருக்கும் நண்பன் என்ற உறவு உண்டு என்றுச் சொல்கிறது?
உறவு முறைகளில் தந்தை என்பது உயர்ந்தது, மதிப்பிற்குரியது, தன் தகுதியை விட்டுக்கொடுக்காமல் கட்டிக்காப்பது. மனிதன் தன்னை தந்தை என்று அழைக்கக்கூடாது என்று கருதும் அல்லாஹ், உறவுகளில் மிகவும் நிபந்தனைகள் இல்லாமல் இருக்கின்ற உறவாகிய 'நண்பன்' என்ற உறவை மட்டும் அல்லாஹ் எப்படி அங்கீகரித்துவிட்டான் (இஸ்லாமிய இறையியலை சிதைக்காமல்)?
தான் படைத்த உலக படைப்பாகிய மனிதனை தனக்கு சமமாக்கியது (நண்பராக்கியது) அல்லாஹ்வே தன் தகுதியை குறைத்துக்கொள்வதாகாதா?
பைபிளின் தேவனை ஏன் குற்றப்படுத்துவதில்லை?
“பைபிளின் தேவனும் இதே இப்ராஹீமை நண்பன் என்றுச் சொல்லும் போது, கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டு, ஏன் அல்லாஹ்வை மட்டும் குற்றப்படுத்துகிறீர்கள்?” என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். பைபிளின் தேவன் மனிதனை நண்பனாக எடுத்துக்கொண்டாலும், பைபிளின் இறையியலை அது பாதிக்காது, உண்மையில் அது இன்னும் பைபிளின் இறையியலை வலுப்படுத்தும். ஆனால், அல்லாஹ் ஒரு மனிதனை நண்பனாக ஏற்றுக்கொண்டால், அது இஸ்லாமின் இறையியலை இல்லாமல் ஆக்கிவிடும், அல்லாஹ்வின் இலக்கணத்துக்கே இழுக்காக மாறிவிடும்.
இதைத் தான் இந்த ஆய்வுக்கட்டுரையில் நாம் ஆராயப்போகிறோம்.
தலைப்புக்கள்:
1) அல்லாஹ்வின் கலீல் இப்ராஹீம் – குர்ஆன் வசனங்கள்
2) இப்ராஹீம் அல்லாஹ்வின் நண்பராக எப்போது ஆனார்?
3) நட்பின் இலக்கணங்கள் (நண்பன் என்றால் யார்?)
4) அல்லாஹ்வின் இறையாண்மையை சிதைக்கும் கலீலுல்லாஹ்
5) யெகோவாவின் இறையாண்மையை சிதைக்காத கலீல்
6) முடிவுரை
1) அல்லாஹ்வின் கலீல் இப்ராஹீம் – குர்ஆன் வசனங்கள்
அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான் என்று அல்லாஹ் குர்ஆனில் ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றான்.
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
4:125. மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
4:125. . . . அல்லாஹ் இப்ராஹீமை(த் தன்னுடைய) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கின்றான்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
4:125. . . . இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
4:125. . . .மேலும் அல்லாஹ் இப்ராஹீமைத் (தன்னுடைய) உற்ற தோழராக எடுத்துக் கொண்டான்.
பி.ஜே. தமிழாக்கம்:
4:125. . . . அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.
2) இப்ராஹீம் அல்லாவின் நண்பராக எப்போது ஆனார்?
அல்லாஹ்விற்கும், இப்ராஹீமுக்கும் இடையே எப்போது நட்பு உண்டானது?
இஸ்லாமிய தஃப்ஸீர்கள்( விளக்கவுரைகள்) என்ன சொல்கின்றன என்பதை பார்ப்போம். நம் ஆய்விற்காக, மூன்று முக்கியமான தஃப்ஸீர்களிலிருந்து மேற்கோள்களைக் காண்போம்.
தஃப்ஸீர் ஜலலைன்:
இவர் தம் விளக்கத்தில் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்(Close Friend) இப்ராஹீம் என்கிறார்.
4.125 Jalal – Al-Jalalayn
And who, that is, [and] none, is fairer in religion than he who submits his purpose, that is, [than he who] is compliant and offers his deeds sincerely, to God and is virtuous, [and] declares God’s Oneness, and who follows the creed of Abraham, the one that is in accordance with the creed of Islam, as a hanīf? (hanīfan is a circumstantial qualifier), that is to say, [one] inclining away from all religions to the upright religion. And God took Abraham for a close friend, as His elect, one whose love for Him is pure. (Source: quranx.com/Tafsir/Jalal/4.125 )
தஃப்ஸீர் வஹிதி (Wahidi – Asbab Al-Nuzul by Al-Wahidi)
வஹிதி தம் தஃப்ஸீரில், ஏன் அல்லாஹ் இப்ராஹீமை உற்ற நண்பனாக எடுத்துக்கொண்டார் என்பதற்கு இரண்டு விவரங்களைக் கொடுக்கின்றார். ஆங்கிலத்தில் உள்ள விவரங்களை சுருக்கமாக தமிழில் தருகிறேன். வாசகர்கள் இந்த தொடுப்பை சொடுக்கி ஆங்கிலத்தில் படித்துக்கொள்ளவும்: quranx.com/Tafsir/Wahidi/4.125
1) முதல் விவரம்: ஒரு முறை இப்ராஹீமிடம் ஒரு தேவதூதன் வந்தான். அல்லாஹ் தம் அடியார்களில் ஒருவரை தன் நண்பராக எடுத்துக்கொண்டார் என்றுச் சொன்னான். உடனே இப்ராஹீம், அவர் யார் என்று கேட்க, நீர் அல்லாஹ்வின் நண்பரானால் என்ன செய்வீர் என்று கேட்டார். அதற்கு 'என் உயிர் இருக்கும் வரை அல்லாஹ்வின் சேவகனாகவே நான் இருப்பேன்' என்று இப்ராஹீம் பதில் அளித்தார். உடனே அந்த தூதன், அல்லாஹ் எடுத்துக்கொண்ட அந்த நண்பர், வேறு யாருமில்லை அது நீர் தான் என்றுச் சொன்னார்.
2) இரண்டாவது விவரம்: ஒரு முறை பஞ்சம் உண்டானது. மக்கள் இப்ராஹீமின் வீட்டுக்கு வந்து உணவுப்பொருட்கள் கேட்டார்கள். இவரிடமும் உணவுப்பெருட்கள் இல்லாதபடியினால், எகிப்திலுள்ள தன் நண்பரிடம் சேவகர்களை அனுப்பினார் இப்ராஹீம். எகிப்திலுள்ள அவரது நண்பர், இப்ராஹீமுக்கு மட்டும் தேவையென்றால் ஏதாவது உதவி செய்யமுடியும், ஆனால் ஊர் மக்களுக்கெல்லாம் தேவையென்றால், அது முடியாது என்று அனுப்பிவிட்டார். சேவர்கள் வெறும் கையொடு திரும்பி வரும்போது, நாம் உணவு தாணியங்கள் இல்லாமல் போனால், இப்ராஹீமுக்கு அவமானமாக இருக்கும், எனவே, தங்கள் பைகளில் மணலை மூட்டை கட்டிக்கொண்டு வந்தார்கள். இவர்கள் இப்ராஹீமுக்கு நடந்ததைச் சொன்னார்கள், வருத்தத்தோடு அனைவரும் தூங்கிவிட்டார்கள். இப்ராஹீமின் மனைவி சாராள் நடந்த விஷயத்தை அறியாமல் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு கண் விழித்த போது, சேவர்கள் மணல் நிறப்பி கொண்டு வந்த பைகளை திறந்து பார்த்தபோது, முதல் தரமான கோதுமை இருப்பதைக் கண்டு, அதன் மூலம் உணவை தயார் படுத்தினார்கள். உணவின் (ரொட்டி) வாசனை மூக்கை துளைக்க இப்ராஹீம் எழுந்து என்ன இது? எங்கேயிருந்து கிடைத்தது உணவு தாணியங்கள் என்று கேட்க? அந்த பைகளில் இருந்தது, உங்கள் எகிப்திய நண்பர் அனுப்பியுள்ளார் என்று சாராள் சொன்னார்கள். அதற்கு இப்ராஹீம் “இல்லை, என்னுடைய நண்பர் அல்லாஹ் தான் இதனை அனுப்பினார்' என்று பதில் அளித்தாராம். அந்த நாள் தான், அல்லாஹ் இப்ராஹீமை தன் நண்பனாக எடுத்துக்கொண்டார்.
தஃப்ஸிர் இப்னு கதீர்:
இப்னு கதீர் தம் விளக்கவுரையில், அல்லாஹ்வின் மீது இப்ராஹீம் கொண்டிருந்த அன்பினிமித்தமும், அவரது கீழ்படிதலின் நிமித்தமும் தான் அல்லாஹ் அவரை நண்பராக எடுத்துக்கொண்டார் என்றுச்சொல்கிறார்.
(And Allah did take Ibrahim as a Khalil (an intimate friend)!) encourages following Ibrahim Al-Khalil, because he was and still is an Imam whose conduct is followed and imitated. Indeed, Ibrahim reached the ultimate closeness to Allah that the servants seek, for he attained the grade of Khalil, which is the highest grade of love. He acquired all this due to his obedience to His Lord (Source: quranx.com/Tafsir/Kathir/4.123 )
இதுவரை கண்ட விவரங்களின்படி, நட்பின் இலக்கணம் என்பது ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாக நேசிப்பதினால் உண்டாவதாகும். மேற்கண்ட தஃப்ஸீர்களில், இப்ராஹீமை கலீலாக (நண்பனாக) அல்லாஹ் ஏற்றுக்கொண்டதைப்போன்று தன்னையும் கலீலாக எற்றுக்கொண்டார் என்று முஹம்மதுவும் சொல்லியுள்ளார் என்பது இன்னொரு குறிப்பு.
3) நட்பின் இலக்கணங்கள் (நண்பன் என்றால் யார்?)
நம் எல்லோருக்கும் நண்பர்கள் இருப்பார்கள், இவர்களில் சிலர் மட்டுமே உற்ற நண்பன் அல்லது உயிர் நண்பன் என்ற நிலையில் இருப்பார்கள். பத்து பேர் நமக்கு நண்பர்கள் இருந்தால், அனைவரும் உயிர் நண்பர்களாக இருக்கமாட்டார்கள், சிலர் மட்டுமே அப்படி இருப்பார்கள்.
பொதுவாக நண்பர்கள் என்றால், ஒரே இடத்தில் வேலை செய்தவர்கள், ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள், ஒரே பகுதியில் வாழ்பவர்கள், உறவினர்கள் என்று பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால், உயிர் நண்பன் என்றால், அவனுடைய குணங்களும், நம்முடைய குணங்களும் பெரும்பான்மையான விஷயங்களில் ஒன்றாக இருக்கும்.
நெருங்கிய நண்பன் என்றால்:
ஆபத்தில் உயிர் கொடுக்கவும் தயாராக இருப்பான்
நண்பனின் இரகசியத்தை கட்டிக்காப்பான்
நம்பிக்கைக்குரியவனாக இருப்பான்
நண்பனுக்காக எதையும் தியாகம் செய்வான்
இதையே இயேசு தன் நண்பனுக்காக உயிரை கொடுக்கும் அன்பைக் காட்டிலும் அதிக அன்பு வேறு எதுவும் இல்லை என்றார்:
யோவான் 15:13. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
ஒரு தந்தை தன் பிள்ளைக்காக உயிரை கொடுத்தால், இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, ஒரு இரத்த உறவு இருப்பதினால் தான் உயிரைக்கொடுத்தான், இது இயற்கையான அன்பு தான். இதே போல், பெற்றோர்களை தங்கள் உயிரை கொடுத்து பிள்ளைகள் காப்பாற்றுவதும், ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் அதிகமாக நேசித்து, உயிரை தியாகம் செய்வதும் இயற்கையே ஏனென்றால், அவர்கள் மத்தியிலே இரத்த உறவு உண்டென்பது தான் அது. ஆனால், நண்பர்களின் நட்புக்கு இரத்த உறவு காரணமாக இருப்பதில்லை, ஜாதிகள் வேறு, நாடுகள் வேறு, நிறங்கள் வேறு, உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற சமூக தீயபழக்கங்கள் நண்பர்களுக்கிடையே வருவதில்லை, ஆனால் ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்காக உயிரை கொடுக்கின்றான் என்றால், அவனது அன்பு அல்லது நட்பு பெற்றோர்கள், சகோதர சகோதரிகளின் மத்தியில் இருக்கும் அன்பைக் காட்டிலும் உயர்ந்தது.
4) அல்லாஹ்வின் இறையாண்மையை சிதைக்கும் கலீலுல்லாஹ்
இதுவரை பார்த்த விவரங்களின் அடிப்படையில், இப்போது நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
அல்லாஹ் எவருக்கும் தந்தையாகமாட்டார் என்றால், அதே அல்லாஹ் எப்படி நண்பனாக முடியும்?
குர்ஆன் 5:18ன் படி, உலக மக்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் தந்தை ஆகமாட்டார், அவர் தண்டனை கொடுக்கின்ற ஒரு எஜமான் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
5:18. யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
அல்லாஹ்விற்கு உண்மையான தந்தை என்ன செய்வார் என்று தெரியவில்லை. பிள்ளைகளை சீர்திருத்த தண்டனைகள் கொடுத்து, அவர்களை நல்ல வழிக்கு கொண்டுவருவது ஒரு தந்தையின் கடமையாகும். நாம் அழிந்துபோகும் படி அல்ல, நமக்கு தீமை செய்யும்படியல்ல, நம் நன்மைக்காக தண்டனைகளை கொடுப்பது ஒரு உண்மையான தகப்பனின் இலக்கணமாகும். இதனை பைபிளின் தேவன் சரியாக சொல்லியுள்ளார்:
எபிரெயர் 12: 5-11
5. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. 6. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். 7. நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? 8. எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. 9. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? 10. அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். 11. எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
முஸ்லிம்களின் வாதங்கள்:
1) அல்லாஹ்வை தந்தை என்று முஸ்லிம்கள் அழைக்கக்கூடாது.
2) யூத கிறிஸ்தவர்களின் கோட்பாடுகளை (இறைவனை தந்தை என்று அழைப்பது) முஸ்லிம்கள் காபி அடிக்கக்கூடாது.
3) அல்லாஹ்வை தந்தை என்று அழைப்பது, அல்லாஹ்வின் இறையாண்மைக்கு இழுக்கு ஆகும்.
4) குர்ஆன் 5:18ன் படி, அல்லாஹ்வை தந்தை என்று அழைப்பது பாவமாகும்.
5) அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளன, அதில் தந்தை என்ற பெயர் இல்லை. எனவே, தந்தை என்ற பெயரில் அல்லாஹ்வை அழைக்கக்கூடாது (7:180).
6) குர்ஆன் சொல்லாத, முஹம்மது சொல்லிக்கொடுக்காத பெயரில் அல்லாஹ்வை அழைப்பது பாவமாகும்.
அல்லாஹ் இப்ராஹீமின் கலீல் ஆவது, அல்லாஹ்வின் இறையாண்மையை சிதைக்கும்:
1) நெருங்கிய நண்பனின் இலக்கணங்களில் சிலவற்றை மேலே கண்டோம். அல்லாஹ் மனிதனுக்கு நண்பனாக மாறினால் இதனால் அவன் இறையாண்மை பாதிக்காதா?
2) அல்லாஹ் தந்தை என்று அழைக்கப்படுவது தவறு என்றுச் சொன்னால், அல்லாஹ் நண்பன் என்று அழைக்கப்படுவது தவறில்லையா? நண்பன் என்ற வார்த்தையை விட தந்தை என்ற வார்த்தை அல்லாஹ்விற்கு தகுதியில்லாத வார்த்தையா?
3) நண்பர்கள் இரகசியங்களை பேசிக்கொள்வார்கள், அல்லாஹ்வும் தன் இரகசியங்களை செயல்களை இப்ராஹீமுக்கு தெரிவித்தாரே (சோதோம் கொமோரா அழிவு பற்றிய விவரங்கள்), இது அவனது இலக்கணத்துக்கு இழுக்கு அல்லவா?
4) அல்லாஹ் உலக மக்களுக்கு தந்தை ஆவதை ஏற்றுக்கொள்ளலாம், ஏனென்றால், பிதா என்ற ஸ்தானத்தில் ஒருவர் இருந்தால், அவர் தன் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமல் தன் பிள்ளைகள் மீது அதிகாரம் செலுத்தலாம், ஆனால், நண்பன் என்பது இப்படி இல்லையே!
5) தன் இறையாண்மையை, தகுதியை நண்பனிடம் காட்டமுடியாது அது தான் உண்மையான நட்புக்கு அடையாளம். அல்லாஹ் இவைகள் அனைத்தையும் விட்டுவிட்டுத் தானே, இப்ராஹீமுக்கு நண்பனானான். அல்லது இப்ராஹீமுக்கு நண்பனாக மாறியது வெறும் வெத்துப்பேச்சா? பெயரளவுக்கு நண்பனாக அல்லாஹ் மாறினானா?
6) அல்லாஹ் சர்வ அதிகாரம் படைத்தவன், நித்திய நியாயாதிபதி, மனித குலத்துக்கு தூரமாக ஒருவரும் பார்க்கமுடியாத இடத்தில் இருப்பவன், தன் படைப்பிற்குள் (பூமிக்குள்) நுழையாதவன், தன் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமல், இன்னொரு மனித அவதாரம் எடுத்து வரமுடியாதவன், எப்படி ஒரு மனிதனை நண்பன் என்று அழைக்கமுடியும்?
7) தான் படைத்த மனிதனை மகன் என்று அழைத்தால், இறைவன் என்ற தகுதிக்கே அவமானம் என்று கருதுபவன், தன் தோள்மீது கைகள் போட்டு நடந்துச்செல்லும் படி மனிதனை நண்பன் என்று அழைப்பது இறைவனுக்கு இழுக்கு அல்லவா?
8) தன் இறைத்தகுதியை பக்கத்தில் வைத்துவிட்டு, மனிதனிடம் நண்பனாக மாறி உரையாடுவது அல்லாஹ்விற்கு அடுக்குமா? தன் இறையாண்மை பாதிக்கப்படாதா? ஒரு தந்தையும் மகனும் நெருக்கமான நட்புடன் இருப்பதைக் காண்பவர்கள், இவர்கள் நண்பர்களைப் போல வாழுகின்றார்கள் என்றுச் சொல்வார்கள். இதன் பொருள் என்ன? தந்தை தன் ஸ்தானத்திலிருந்து இறங்கி வந்து, தன் மகனுடைய ஸ்தானத்திற்கு தன்னை தாழ்த்தி, நெருங்கிய நண்பர்களாக வாழ தன் 'தந்தை என்ற இறையாண்மையை' விட்டுக்கொடுத்துள்ளார் என்று பொருள்.
9) அல்லாஹ் இப்ராஹீமுக்கு நண்பனாக மாற தன் ஸ்தானத்திலிருந்து இறங்கி, தன்னை ஒரு மனிதனுடைய ஸ்தானத்திற்கு சமமாக்கி, தன்னைத் தாழ்த்தி வந்தான் என்று சொல்வது சரியா? இதைவிட சிறந்தது, அல்லாஹ் உலக மக்களுக்கு தகப்பன் என்றுச் சொல்வதாகும். ஆனால், இஸ்லாம் என்ன சொல்கிறது? அல்லாஹ் தன் நிலையை விட்டு இறங்கி வரமுடியாது, தகப்பன் ஆகமுடியாது. ஆனால், அல்லாஹ் நண்பன் ஆகமுடியும் என்றுச் சொல்வது, சரியான இஸ்லாமிய இறையியலாகத் தோன்றுகிறதா? சிந்தியுங்கள்.
10)அல்லாஹ் ஏன் இந்த வேஷம் போடுகின்றான்? நண்பன் என்ற வேஷம் போட வெட்கப்படாதவன், தந்தை என்று தன்னை அழைத்துக் கொள்வதற்கு ஏன் இந்த வெட்கம்?
“இப்ராஹீம் தன் நண்பன் (கலீல்)” என்று அல்லாஹ் சொன்னது, அவனது இறையாண்மைக்கு இழுக்கு என்பதை இதுவரைக் கண்டோம்.
5) யெகோவாவின் இறையாண்மையை சிதைக்காத கலீல்
பைபிளின் தேவன் தான் முதன் முதலாக இப்ராஹீமை தன் சிநேகிதன் என்றுச் சொன்னார். இஸ்லாமுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இது பதிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் மிகவும் அழகாக, ஆபிரகாம் தேவனின் சிநேகிதன் என்று சொல்லப்பட்டுள்ளது. ஏசாயாவில் கர்த்தரே “என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே” என்றுச் சொல்கிறார். நாளாகமம் வசனத்தில் ஒரு அரசன் தேவனிடத்தில் ஜெபிக்கும் போது, கடந்த கால நிகழ்ச்சிகளைச் சொல்லி ஜெபிக்கும் போது, இந்த தேசத்தை “உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?” என்று மன்றாடுகின்றார்.
ஏசாயா 41:8-10
8. என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, 9. நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். 10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
II நாளாகமம் 20:7
7. எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?
ஆபிரகாம் தேவனின் சிநேகிதன் என்று பழைய ஏற்பாடு சொல்வதை யூதர்கள் நன்கு அறிந்திருந்தனர். அதனை இன்னொரு முறை புதிய ஏற்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாக்கோபு 2:23
23. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
பைபிளின் பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் 'ஆபிரகாம் தேவனின்' நண்பன் என்றுச் சொல்வதை முஹம்மது அல்லது குர்ஆனை இறக்கியவர் அறிந்திருக்கிறார். எனவே, அதே விவரத்தை குர்ஆனிலும் சொல்லியுள்ளார்கள். இப்போது நம்முடைய கேள்வி, இப்ராஹீம் அல்லாஹ்வின் நண்பரா இல்லையா என்பதல்ல. பிரச்சனை எதுவென்றால், தன் இறையியலுக்கு இழுக்காக இருந்தும் ஏன் குர்ஆன் இதனை சொல்கிறது என்பது தான்.
சர்வ வல்லவரான, மெய்யான தேவன், தன் வார்த்தையால் உலகை படைத்த யெகோவா தேவன், ஆபிரகாமை தன் நண்பன் என்றுச் சொன்னது அவருடைய இறையாண்மைக்கு இழுக்கு ஆகாதா? நிச்சயமாக அவருடைய இறையாண்மையை பாதிக்காது. இதற்கு கீழ்கண்ட காரணங்களைச் சொல்லமுடியும்.
1) யெகோவா தேவன் சர்வவல்லவராகவும், சர்வஞானியாகவும், சர்வவியாபியாகவும் இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய இறையாண்மைக்கும், தெய்வத்துவத்துக்கும், இறை இலக்கணத்துக்கும் பங்கம் விளைவிக்காமல், அவர் அல்லாஹ் செய்யமுடியாத அனைத்து காரியங்களையும் செய்கிறார்.
2) யெகோவா தேவன் தான் படைத்த மனிதர்களுக்கு தன்னை தந்தையாகவும், சகோதரனாகவும், தாயாகவும், கணவராகவும் வெளிப்படுத்துகின்றார். இவைகள் அனைத்தும் குடும்ப உறவுகள் பற்றியதாகும். கிறிஸ்தவர்கள் தேவனை பிதா என்று அழைத்தாலும், தாய் என்றாலும், நண்பன் என்றாலும், சகோதரன் என்று அழைத்தாலும், அவருடைய இறையாண்மைக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது, இது தான் கிறிஸ்தவத்தின் இறையியலின் சிறப்பு. இந்த சிறப்பு இஸ்லாமிய இறையியலில் இல்லை. ஒருவர் அல்லாஹ்வை தந்தை என்று அழைத்தால் போதும் அல்லாஹ்விற்கு கோபம் வந்துவிடும்.
3) குடும்ப உறவுகளுக்கு வெளியேயும் யெகோவா தேவன் தம்மை, ஒரு மேய்ப்பனாக (ஆடுகளை மேய்த்து, காப்பவனாக), ஒரு தோட்டக்காரனாக (பயிரை, மரங்களை காப்பவனாக), ஒரு வியாபாரியாக, எஜமானனாக, ஒரு ஆசிரியனாக வெளிப்படுத்துகிறார். இதனாலும் அவருடைய தெய்வீகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை.
4) கடைசியாக, யெகோவா தேவன் இப்ராஹீமை தன் சிநேகிதன் என்றுச் சொல்லும் போதும், இயேசு தம் சீடர்களைப் பார்த்து நீங்கள் என் சிநேகிதர்கள் என்றுச் சொல்லும் போதும், இவர்களின் இறையாண்மைக்கு எந்த ஒரு பாதிப்பும் உண்டாகாது.
எசேக்கியேல் 34: 31. என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
மேலும் பார்க்க சங்கீதம் 23 (மேய்ப்பன் பற்றி இன்னும் பழைய ஏற்பாட்டில் பல வசனங்கள் உள்ளன).
பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, தேவன் தன்னை ஒரு மேய்ப்பனாக வெளிப்படுத்தும் போது, காணாமல் போன ஆட்டை கண்டுபிடித்து, தன் தோள் மீது (கவனிக்கவும், உலகத்தை படைத்த இறைவனின் தோள் மீது) சுமந்துக்கொண்டு சந்தோஷப்படுகின்றார் என்று சொல்லும் போது, அவருடைய இறையாண்மை பாதிக்கப்படவில்லை என்றால் , வேறு எந்த ஒரு குணாதிசயம் அவருடைய இறையாண்மையை பாதிக்கும்? இப்படிப்பட்ட வர்ணனையை அல்லாஹ்விற்கு கொடுக்கமுடியுமா? அதாவது ஒரு மனிதன் இஸ்லாமை தழுவும் போது, அதாவது காணாமல் போன ஆட்டை மேய்ப்பனாகிய அல்லாஹ் கண்டுபிடிக்கும் போது, அந்த ஆட்டுக்குட்டியை தன் தோள்கள் மீது சுமந்துக்கொண்டு வந்து, மற்றவர்களோடு மகிழ்ச்சி அடையும் இந்த படத்தை அல்லாஹ்வைப் பற்றி கற்பனை செய்து பார்க்கமுடியுமா? நிச்சயமாக முடியாது. அல்லாஹ்வை யாரும் நெருங்க முடியாது, அவருடைய தோள்களில் ஒரு மனிதன் ஆட்டிக்குட்டி போன்று பயணம் செய்வதா? இது தெய்வக்குற்றமாகுமே! என்று முஸ்லிம்கள் எண்ணுவார்கள். ஆனால், யெகோவா தேவனுக்கு, அவருடைய இறையாண்மைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், இது சாத்தியமே.
எனவே, யெகோவா இப்ராஹீமை நண்பன் (கலீல்) என்று அழைத்தது அவருடைய இறையாண்மைக்கு எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்காது, ஆனால் அல்லாஹ்விற்கு உண்டாகும்.
7) முடிவுரை
இதுவரை கண்ட விவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தால், நமக்கு கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக புரியும்.
1) பைபிளின் இறைவனும், குர்ஆனின் இறைவனும் இப்ராஹீமை நண்பன் என்று அழைத்துள்ளனர்.
2) குர்ஆன் சொல்லும் அல்லாஹ்வின் இறையாண்மை வேறு, பைபிள் சொல்லும் யெகோவா தேவனின் இறையாண்மை வேறு. இவ்விருவரும் ஒருவரல்ல. இவ்விருவரின் இறை இலக்கணங்களும் வெவ்வேறாக உள்ளன.
3) ஒரு மனிதனுக்கு குடும்பம், நட்பு, மற்றும் தொழில் போன்ற இடங்களில் கிடைக்கும் அனைத்துவித முக்கியமான உறவுகளை யெகோவா தேவன் தன்னோடு சம்மந்தப்படுத்தி மக்களோடு பேசுகின்றார். தந்தை முதல் நண்பன் வரை, ஆசிரியர் முதல் மேய்ப்பன் வரை, யெகோவா தேவன் தன்னை மனிதனுக்கு அறிமுகம் செய்கின்றார். ஆனால், அல்லாஹ் இப்படிப்பட்ட தனிப்பட்ட விதத்தில் மனிதனோடு பேசுவதில்லை உறவாடுவதில்லை (தந்தையாக, சகோதரனாக மனிதனோடு பேசுவதில்லை).
இரத்தின சுருக்கமாக சொல்வதானால், யெகோவா தேவன் “மனிதன் தன் நண்பன்” என்றுச் சொன்னால், அவரது இறையாண்மைக்கு எந்த ஒரு பாதிப்பும் உண்டாகாது. அல்லாஹ் “மனிதன் தன் நண்பன்” என்றுச் சொன்னால், இது அவனது இறையாண்மைக்கும், இஸ்லாமின் இறையியலுக்கும் பங்கம் விளைவிக்கும் என்பது தான் என் கட்டுரையின் சுருக்கம்.
உண்மை இறைவன் குர்ஆனை இறக்கியிருந்தால், இந்த முரண்பாடு குர்ஆனில் இருக்கவாய்ப்பு இல்லை. குர்ஆன் 4:125ம் வசனத்தை ஒரு மனிதன் இஸ்லாமின் இறையியலை சரியாக புரிந்துக்கொள்ளாமல் அறியாமையினால் குர்ஆனில் புகுத்தி இருக்கவேண்டும். முந்தைய வேதங்களில் இருப்பதெல்லாம் அப்படியே குர்ஆனில் பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினால், அதோடு கூட முந்தைய வேதங்களில் உள்ள இறையியலையும் பயன்படுத்தவேண்டும். அதாவது யெகோவா தேவன் ஒரு தந்தை என்ற ஸ்தானத்தில் தன் மக்களை நேசிக்கிறார் என்ற கோட்பாட்டையும் அல்லாஹ்விற்கு சூட்டியிருந்தால், பிரச்சனை இல்லை.


Comments