சிலுவைப்போர்கள் பற்றிய தவறான 6 கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் – பாகம் 5
- TamilChristians Admins

- Jan 14, 2020
- 8 min read
சிலுவைப்போர்கள் பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்
சரித்திரத்தை சரியாக படிக்காதவர்கள் சிலுவைப்போர்கள் பற்றி பல தவறான கருத்துக்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போதைய கட்டுரையில், சிலுவைப்போர்கள் பற்றிய 6 தவறான புரிதல்களைக் காண்போம், அவைகளுக்கான பதில்களைக் காண்போம்.
சிலுவைப்போர்கள் பற்றிய 6 தவறான நம்பிக்கைகள்/புரிதல்கள்:
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த போது, வலியச்சென்று முஸ்லிம்கள் மீது சண்டையிட்டனர் சிலுவைப்போராளிகள் (கிறிஸ்தவர்கள்).
சீக்கிரமாக பணக்காரர்கள் ஆகவேண்டுமென்ற பேராசையால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம் நாடுகள் மீது போரிட்டனர், அவைகள் தான் சிலுவைப்போர்கள்.
சிலுவைப்போர்கள் மூலமாக முஸ்லிம் நாடுகளை தாக்கியதால் தான், அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள் மற்றும் தாக்குகிறார்கள். முஸ்லிம்களுக்கு சண்டையிட தூண்டியதே சிலுவைப்போர்கள் தான்.
இன்றைய இஸ்லாமிய தீவிரவாதிகளும், சிலுவைப்போராளிகளும் ஒரே வகை தானே! (அல்லது) ஜிஹாதும் சிலுவைப்போர்களும் ஒரே வகை தானே
சிலுவைப்போர்கள் யூதர்களுக்கும் எதிராக நடந்ததே, இது எப்படி நியாயம்?
முதல் சிலுவைப்போராளிகள் (கி.பி. 1099) எருசலேமைக் கைப்பற்றியபோது, வீதிகளில் கணுக்கால் அளவு இரத்தம் ஓடும் அளவிற்கு, எருசலேம் நகரின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும், குழந்தைகளையும் கொலை செய்தனர்.
இப்போது மேற்கண்ட ஒவ்வொரு புரிதலையும் ஆய்வு செய்வோம்.
தவறான புரிதல் 1:
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த போது, வலியச்சென்று முஸ்லிம்கள் மீது சண்டையிட்டனர் சிலுவைப்போராளிகள் (கிறிஸ்தவர்கள்).
இது ஒரு தவறான புரிதலாகும்.
முஹம்மது மரணம் அடைந்த ஆண்டு முதல், கிறிஸ்தவ நாடுகளை பிடிப்பதே தங்கள் தலையாய கடமையாகக் கொண்டு இஸ்லாமிய கலீஃபாக்கள் போர்கள் புரிந்தார்கள். கிறிஸ்தவ நாடுகள் மீது முஸ்லிம்கள் வலியச் சென்று யுத்தம் செய்தார்கள். அக்காலத்தில் இருந்த மொத்த கிறிஸ்தவ நாடுகளில் கிட்டத்தட்ட 2/3 (மூன்றில் இரண்டு பாக) கிறிஸ்தவ நாடுகளை கைப்பற்றினார்கள் முஸ்லிம்கள். கிறிஸ்தவ தேவாலயங்களை அழித்தார்கள். பைசாண்டைன் கிறிஸ்தவ ஆட்சியாளர்களோடு சண்டையிட்டு எருசலேமை பிடித்தார்கள், எகிப்து, வட ஆப்ரிக்க நாடுகள், ஆசியா மைனர் என்றழைப்படும் இன்றைய துருக்கி, மேலும் ஸ்பெயின்வரைக்கும் சென்று நாடுகளை பிடித்து, கொள்ளையிட்டார்கள், பெண்களையும், குழந்தைகளையும அடிமைகளாக விற்றார்கள்.
700 லிருந்து 2 ஆக குறைக்கப்பட்ட பிஷப்புக்கள்:
இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கைகளில் கிறிஸ்தவ சமுதாயம் எப்படிப்பட்ட துன்பங்களை சந்தித்தது என்பதை அறிய இந்த சிறிய புள்ளிவிவரத்தை கவனியுங்கள்.
கி.பி. 5ம் நூற்றாண்டில் ஆஃப்ரிக்க நாடுகளில் இருந்த மொத்த கத்தோலிக்க தேவாலயங்களில் 700 ஆயர்கள் (பிஷப்கள்) பணியில் இருந்தார்கள். இஸ்லாமுக்கு பிறகு மொத்த ஆயர்களின் எண்ணிக்கை 2ஆக குறைந்தது.
இப்படங்களை பாருங்கள்:
அட்டவணை: ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை – இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்

வரைபடம் (Bar Chart): ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை – இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்:

மேலும், கீழ்கண்ட கட்டுரையை படித்துத் பாருங்கள், முதல் சிலுவைப்போர் தொடங்கப்பட்ட நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் செய்த வன்கொடுமைகள் என்னென்னவென்றும், ஏன் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன என்றும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கிறிஸ்தவர்கள் ஒரு இரண்டாம் தர மக்களாக, ஜிஸ்யா வரி செலுத்திக்கொண்டு வாழ்ந்தார்கள்.
ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், தங்கள் நாடுகள் மீது அநியாயமாக முஸ்லிம்கள் போர் புரிந்த பிறகும், 463 ஆண்டுகள் கழித்து தான் முதல் சிலுவைப்போரை துவக்கினார்கள் கிறிஸ்தவர்கள், அதுவும் கிறிஸ்தவத்தின் புனித ஸ்தலங்களை மீட்கவே இப்போர்கள் நடத்தப்பட்டன.
இதுவரை கண்ட விவரங்களின் படி, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள் என்ற வாதம் தவறானதாகும். முஸ்லிம்களின் கைகளில் கிறிஸ்தவர்கள் பட்ட பாடுகள் அதிகம், அதன் உச்சக்கட்டமே சிலுவைப்போர்கள்.
தவறான புரிதல் 2:
சீக்கிரமாக பணக்காரர்கள் ஆகவேண்டுமென்ற பேராசையால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம் நாடுகள் மீது போரிட்டனர், அவைகள் தான் சிலுவைப்போர்கள்.
இதுவும் ஒரு தவறான புரிதல் தான். ஏனென்றால், சிலுவைப்போரில் ஈடுபட்டவர்கள் போரிடுவதற்கு ஆகும் செலவுகளை தங்கள் சொந்த சொத்துக்களை விற்று போருக்காக செலவிட்டார்கள். ஒரு கிறிஸ்தவன் தன் மார்க்கத்தின் புனித இடங்களை முஸ்லிம்களிடமிருந்து காக்க சிலுவைப்போரில் ஈடுபடவேண்டுமென்றால், தன் குடும்பத்தை காப்பதற்கு தேவையான பணத்தை தயார் படுத்தி கொடுத்துவிட்டு போருக்கு வரவேண்டும். தன்னுடைய செலவிற்கும் தேவையான பணத்தை வைத்துக்கொண்டு தான் போரிட வரவேண்டும்.
சிலுவைப்போராளிகள் தாங்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதாக நினைத்து சண்டையிட்டனர். மேலும் அன்று சிலுவைப்போரை தொடங்க காரணமாக இருந்த போப்மார்கள், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட நீங்கள் சிலுவைப்போர்களில் ஈடுபடவேண்டும் என்று மக்களை உற்சாகப்படுத்தினதினால், மக்கள் திரண்டு வந்தனர். எப்படி ஜிஹாதில் ஈடுபட்டு மரித்தால் சொர்க்கம் நிச்சயம், அங்கு 72 கன்னிகைகள் கிடைப்பார்கள் என்று முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம் வாலிபர்களை உற்சாகப்படுத்தி ஜிஹாதில் பங்கு கொள்ள வைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அதே போலத்தான் போப்மார்கள் அன்று “புனித இடங்களை மீட்க நீங்கள் போரிட்டால், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று போதனை செய்தார்கள் (இது பைபிளின் படி தவறு என்பது தான் கசப்பான உண்மை).
மேற்கத்திய ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமைகளை வைத்து தான் போரில் ஈடுபட்டனர். ஆனால், கிழக்கத்திய கிறிஸ்தவர்களில் சிலர் பயனடைந்தார்கள் என்பதும் உண்மையே. ஆனால், அந்த சதவிகிதம் மிகவும் குறைவு. கடைசியாக, சிலுவைப்போர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல, கிறிஸ்தவ புனித இடங்களை முஸ்லிம்களிடமிருந்து மீட்டு, புனித யாத்திரை செய்பவர்களுக்கு ஆபத்து இல்லாத பயணங்களை உண்டாக்கிக் கொடுப்பதாகவே இருந்தது. சரித்திரத்தை படிப்பவர்கள் இதனை புரிந்துக்கொள்வார்கள்.
குருசேடர்கள் தங்களை வறியவர்களாக்கிக் கொண்டு தான் போருக்குச் சென்றார்கள். சிலுவைப்போர்கள் அனைத்தையும் பார்க்கும் போது, அது ஒரு மிகப்பெரிய நஷ்டமடைந்த ஒரு செயலாகவே இருந்தது.
முக்கியமாக கவனிக்கவேண்டி விவரம் என்னவென்றால், மேற்கத்திய சிலுவைப்போராளிகள் எருசலேமை பிடித்த பிறகு, புனித இடங்களை மீட்க எடுத்துக்கொண்ட வாக்குறுதியை நிறைவேறிவிட்டபடியினால், அவர்கள் கிழக்கு நாடுகளில் தங்கிவிடாமல் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இதனால் தான் மறுபடியும் எருசலேம் முஸ்லிம்களின் கைகளுக்கு மாறியது.
இந்த போர்களில் ஈடுபட்ட பணக்காரர்கள் தங்களுக்குத் தேவையான உணவுகளை வாங்கிக்கொள்ள அவர்களால் முடிந்தது, ஆனால் பலரால் முடியாத போனபோது, இவர்கள் சில இடங்களில் வழிப்பறி கொள்ளைகளிலும் ஈடுபட்டனர், இது துரதிஷ்டவசமானதாக மாறியது. உணவு பஞ்சத்தாலும், உடல் நலக்குறைவினாலும் சிலுவைப்போராளிகளில் இருந்த ஏழைகள் மரித்தார்கள், ஆனால் பணத்தைக் கொண்டுவந்தவர்கள் இதனை தாக்குபிடித்தார்கள்.
முதல் சிலுவைப்போரை துவக்கிய போப் அர்பன் 2 என்பவர் கீழ்கண்ட விதமாகச் சொல்லி, மக்களை உற்சாகப்படுத்தினார்: உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும், உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றுச் சொல்லி, மக்களை உற்சாகப்படுத்தினார். பணத்திற்காக சிலுவைப்போருக்கு அவர் அழைத்திருந்தால், யாருமே வந்திருக்கமாட்டார்கள்.
Pope Urban II (1042-1099 A.D.), said:
“If those who set out thither should lose their lives on the way by land, or in crossing the sea, or in fighting the pagans, their sins shall be remitted. This I grant to all who go, through the power vested in me by God.”1
“Let those who have been accustomed to make private war against the faithful carry on to a successful issue a war against the infidels, which ought to have been begun ere now. Let these, who for a long time have been robbers now become soldiers of Christ. Let those who once fought against brothers and relatives now fight against the barbarians.”2
சிலுவைப்போர்கள் சரித்திரத்தை முழுவதுமாக படிப்பவர்கள் “சிலுவைப்போராளிகளின் நோக்கம் பேராசை இல்லை” என்பதை புரிந்துக்கொள்வார்கள்.
தவறான புரிதல் 3:
சிலுவைப்போர்கள் மூலமாக முஸ்லிம் நாடுகளை தாக்கியதால் தான், அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள் மற்றும் தாக்குகிறார்கள். முஸ்லிம்களுக்கு சண்டையிட தூண்டியதே சிலுவைப்போர்கள் தான்.
சிலுவைப்போர்களுக்கு பிறகு தான் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள் என்ற கூற்றில் உண்மை இல்லை. சரித்திரம் இதற்கு எதிராக சாட்சி சொல்கிறது, குர்ஆன் இதற்கு எதிராக சாட்சி சொல்கிறது.
முஸ்லிமல்லாதவர்களை நேசிக்கும்படி குர்ஆனோ, முஹம்மதுவோ கட்டளையிடவில்லை. குர்ஆன் சொல்லாத ஒன்றை, முஹம்மது கற்றுக்கொடுக்காத ஒன்றை முஸ்லிம்கள் எப்படி பின்பற்றுவார்கள்? மக்காவில் முஹம்மது தன் பிரச்சாரத்தை ஆரம்பித்த போது, யூத கிறிஸ்தவர்களைப் பற்றி கரிசனையாக குர்ஆன் பேசியது, ஆனால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் முஹம்மதுவை நபி என்று ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், அவர்களை எதிர்க்கவும், போர் புரியவும் குர்ஆன் கட்டளையிட்டது.
யூதர்களும் கிறிஸ்தவர்களும் காஃபிர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள், இஸ்லாம் என்ற ஒரு மார்க்கம் மட்டும் தான் அரேபிய நிலப்பகுதியில் இருக்கவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தாக்கினார்.
முஹம்மதுவிற்கு ஒரு யூதப்பெண் விஷம் வைத்தாள் என்பதால் முஸ்லிம்களின் கோபம் (இன்று கூட) இன்னும் அதிகரித்தது. முஹம்மது மரித்த ஆண்டே பைசாண்டைன் ஆட்சியாளருக்கு எதிராக முஹம்மது போரை துவங்கிவிட்டார், இவரது வழியில் தான் பிறகு வந்த கலீஃபாக்கள் கிறிஸ்தவ நாடுகளை பிடித்தார்கள்.
இந்த தொடர் கட்டுரைகளின் பாகம் 2, 3 மற்றும் 4ஐ படித்துப் பாருங்கள். முஹம்மது மரித்த ஆண்டு கி.பி. 632 முதல், 11வது நூற்றாண்டில் (463 ஆண்டுகளுக்கு பிறகு) முதல் சிலுவைப்போர் தொடங்கப்பட்ட ஆண்டுவரை (கி.பி. 1096) எத்தனை கிறிஸ்தவ நாடுகளை முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள், எத்தனை தேவாலயங்களை அழித்தார்கள் என்ற பட்டியல் சரித்திர விவரங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றை தெளிவாக நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமின் அடிப்படை கோட்பாடு, “போர் புரிந்து மற்ற நாடுகளை பிடித்து, உலகமனைத்தையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பது தான்”.
இதனைத் தான் முஹம்மது செய்தார், அரேபியாவை முழுவதுமாக ஆக்கிரமித்தார், இதையே கலீஃபாக்களும் செய்தார்கள், அக்காலத்தில் இருந்த மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் இரண்டு பாகங்களை பிடித்தார்கள். இவைகளெல்லாம் கி.பி. 1096க்குள் (முதல் சிலுவைப்போர்) முடிந்துவிட்டது, இப்படி இருக்க, 'சிலுவைப்போர்களினால் தான் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை தாக்குகிறார்கள், வெறுக்கிறார்கள்' என்றுச் சொல்வது மடமையாகும், இஸ்லாமிய சரித்திரத்தை, குர்ஆனையும், இஸ்லாமையும் அறியாதவர்கள் பேசும் பேச்சாகும்.
இன்றைய முஸ்லிம்கள் ஏன் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள்:
சரி, இன்றைய முஸ்லிம்கள் ஏன் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள் (ஜனநாயக நாடுகளில் இதனை வெளியே காட்டுவதில்லை) என்று கவனித்தால், இன்னும் அதிகமான காரணங்கள் நமக்குத் தெரியும்.
1) ஏற்கனவே குர்ஆனும், ஹதிஸ்களும் காஃபிர்களை வெறுக்கச் சொல்கிறது, இதனை முஸ்லிம்கள் அறிவார்கள், கீழ்படிகிறார்கள்.
2) இஸ்லாம் கிறிஸ்தவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து என்ன செய்தது என்ற சரித்திரத்தை முஸ்லிம்கள் படிப்பதில்லை.
3) சிலுவைப்போர்கள் பற்றிய தவறான கருத்துக்களை, ஜாகிர் நாயக், பீஜே போன்ற அறிஞர்கள் பரப்ப அதனை உண்மையென்று நம்புகிறார்கள் இன்றைய முஸ்லிம்கள்.
4) இது போதாது என்றுச் சொல்லி, எரிகிற புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, இஸ்ரேல் என்ற நாடு 1900 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று 1945ம் ஆண்டுகளில் முளைத்தெழும்பியது.
5) அதுவும் பல இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் முளைத்தெழும்பி இஸ்ரேல் அசைக்கமுடியாத ராஜ்ஜியமாக முஸ்லிம் நாடுகளுக்கு சவால் விட்டுக்கொண்டு இருக்கிறது.
6) முஸ்லிம்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தும்விதமாக மேற்கத்திய நாடுகள் முக்கியமாக அமெரிக்கா போன்ற நாடுகள் இஸ்ரேல் நாட்டை ஆதரிக்கிறது. மேற்கத்திய நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள் (இதில் பாதி உண்மை, பாதி பொய் உள்ளது). இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.
7) சும்ம கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் என்று சொல்வதுபோன்று ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது அமெரிக்க போர் தொடுத்து, இன்னும் முஸ்லிம்களின் கோப அக்கினியை ஊதிவிட்டது.
8) முஸ்லிம்களால் ஹீரோக்கள் என்று கருத்தப்பட்ட மற்றும் உலகத்தினால் பயங்கரவாதிகள் என்று கருதப்படுகின்ற சத்தாம் உசேன், பின்லாடன், ஐஎஸ் ஐஎஸ் தலைவர் பக்தாதி மற்றும் ஈரானின் சுலைமானி போன்றவர்களை பொறுக்கி பொறுக்கி அழித்துக்கொண்டு வருகிறது அமெரிக்கா.
இப்படி சரித்திரத்தில் நடந்த மற்றும் நம் காலக்கட்டங்களில் நடந்துக்கொண்டு இருக்கிற நிகழ்ச்சிகளின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கும் முஸ்லிம்கள் 'இவைகளுக்கெல்லாம் காரணம் கிறிஸ்தவர்களே' என்று தவறாக புரிந்துக்கொண்டு வெறுக்கிறார்கள், தாக்குகிறார்கள்.
சிலுவைப்போர்கள் மூலமாக நடந்த ஒரு நல்ல காரியம் எதுவென்றால், வேகமாக உலக நாடுகளை கைப்பற்றிக்கொண்டு இருந்த முஸ்லிம்களின் கொட்டத்தை சிறிதளவு அது தடுத்தது, அல்லது தாமதப்படுத்தியது. சிலுவைப்போர்கள் நடக்காமல் இருந்திருந்தால் இன்றுள்ள உலகின் பாதிக்கு மேல் இஸ்லாமிய நாடுகளாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது.
இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் என்று நினைத்தாலும் இதனை நான் சொல்லிவைக்கிறேன், அதாவது மீனுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா! முஸ்லிம்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை வெறுக்க கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன?
இந்த கூற்றில் தவறு இருந்தால், கோர்வையாக குர்ஆனை படியுங்கள், தஃப்ஸீர்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படியுங்கள், ஹதீஸ்களில் முஹம்மது கற்றுக்கொடுத்திருப்பவைகளை படியுங்கள், அப்போது தான் மேலே சொன்ன என்னுடைய கூற்றில் உண்மை இருக்கிறது என்று உங்களுக்கு புரியும்.
தவறான புரிதல் 4:
இன்றைய இஸ்லாமிய தீவிரவாதிகளும், சிலுவைப்போராளிகளும் ஒரே வகை தானே! (அல்லது) ஜிஹாதும் சிலுவைப்போர்களும் ஒரே வகை தானே.
இதுவும் ஒரு தவறான கூற்று. ஜிஹாத் பற்றிய உண்மையை அறியாதவர்களின் கூற்று. ஜிஹாத் என்பது வேறு, சிலுவைப்போர் என்பது வேறு. இவ்விரண்டிற்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. அவைகளை சுருக்கமாக கீழே தருகிறேன், அப்போது தான் உங்களுக்கு உண்மை புரியும்.
பட்டியல்: ஜிஹாதுக்கும் சிலுவைப்போர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள்:எண் ஜிஹாத் (இஸ்லாமிய புனித போர்)சிலுவைப்போர்1
கட்டளை: ஜிஹாத் குர்ஆனின் கட்டளை. முஹம்மதுவும் ஈடுபட்டார், முஸ்லிம்களுக்கும் கட்டளையிட்டார்:
சிலுவைப்போர் பைபிளின் கட்டளையில்லை. இயேசு புனிதப்போரை அனுமதிக்கவில்லை2கடமை: முஸ்லிம்களுக்கு ஜிஹாதில் ஈடுபடுவது கடமைகிறிஸ்தவர்களுக்கு புனிதப்போர்களில் ஈடுபடுவது கடமையில்லை. உண்மையில் கிறிஸ்தவத்தில் புனிதப்போர் இல்லை.3உலக முடிவு வரை கடமை: உலகத்தின் கடைசி நாள் வரை ஜிஹாத் முஸ்லிம்களுக்கு ஒரு கட்டளையாக இருக்கும்புனிதப்போர் என்று ஒன்று கிறிஸ்தவர்களுக்கு இல்லை4குர்ஆனுக்கு கீழ்படிவது: குர்ஆனுக்கு உட்பட்டு, அதன் கட்டளையின் படி ஜிஹாத் நடத்தப்படுகின்றதுபைபிளுக்கு எதிராக செயல்பட்டு, நடத்தப்பட்டதே சிலுவைப்போர்கள். இது தேவன் அனுமதிக்காதது5சொர்க்கம் கியாரண்டி: ஜிஹாதில் மரிப்பவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது சிலுவைப்போர்களில் மரிப்பவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று பைபிள் சொல்லவில்லை, கிறிஸ்தவம் இதனை ஆதரிப்பதில்லை. தவறாக சில கிறிஸ்தவ ஊழியர்கள் (போப்புக்கள்) செய்த காரியம் தான் சிலுவைப்போர்கள்.6ஜிஹாதிகள் ஹீரோக்கள்: இஸ்லாமியர்களின் (இஸ்லாமின்) பார்வையில் ஜிஹாத் செய்பவர்கள் ஹீரோக்கள் (நல்லவர்கள்)சிலுவைப்போராளிகள் ஹீரோக்கள் என்று சொல்வதற்கு பைபிளில், இயேசுவின் போதனைகளில், அப்போஸ்தலர்களின் வழிகாட்டுதலில் ஆதாரம் இல்லை. இயேசுவை உண்மையாக விசுவாசிக்கின்ற கிறிஸ்தவர்கள் சிலுவைப்போராளிகளை ஹீரோக்களாக பார்ப்பதில்லை மேலும் பார்க்கமுடியாது.7ஒரே குடையின் கீழ் உலக நாடுகள்: ஜிஹாதின் இன்னொரு நோக்கம் உலக நாடுகளை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவருவது. இதனால் தான் முஹம்மது முதற்கொண்டு, இன்றுவரை இஸ்லாமிய நாடுகள் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.சிலுவைப்போர்களின் நோக்கம், கிறிஸ்தவ புனித ஸ்தலங்களை முஸ்லிம்களிடமிருந்து மீட்டு, அவ்விடங்களுக்கு யாத்திரை செய்பவர்களுக்கு நன்மை செய்வதாகவே இருந்தது. சிலுவைப் போர்கள் நடந்த இடங்களை கவனித்தால் இதனை புரிந்துக்கொள்ளலாம். இதர முஸ்லிம் நாடுகளை பிடிக்க ஒருபோதும் சிலுவைப்போர்கள் நடக்கவில்லை. கிறிஸ்தவ நாடுகளாக மற்ற நாடுகளை ஆக்குவோம் என்ற நோக்கில் அவைகள் நடத்தப்படவில்லை.
மேலே கண்ட வித்தியாசங்களை கவனித்தீர்களா?
ஜிஹாதிகளும் சிலுவைப்போராளிகளும் ஒன்றா? இல்லை.
ஜிஹாதும் சிலுவைப்போர்களும் ஒன்றா? இல்லை.
சுருக்கமாகச் சொல்வதென்றால், குர்ஆனை பின்பற்றுபவன் ஜிஹாதில் ஈடுபடுவான், பைபிளை பின்பற்றுபவன் எந்த ஒரு புனிதப்போரிலும் ஈடுபடமாட்டான்.
ஜிஹாதி குர்ஆனுக்கு கீழ்படிகின்றான், சிலுவைப்போராளி பைபிளுக்கு கீழ்படியவில்லை.
தவறான புரிதல் 5
சிலுவைப்போர்கள் யூதர்களுக்கும் எதிராக நடந்ததே, இது எப்படி நியாயம்?
எந்த போப்பும் யூதர்களுக்கு எதிரான சிலுவைப் போரை தொடங்கவில்லை. முதல் சிலுவைப் போரின் போது, பிரதான இராணுவத்துடன் தொடர்புபடுத்தப்படாத ஒரு பெரிய குழு, தாங்கள் சுயமாக முடிவு செய்துக்கொண்டு, ரைன்லேண்ட் நகரங்களில் இறங்கி, அங்கு அவர்கள் கண்ட யூதர்களைக் கொள்ளையடித்து கொலை செய்தார்கள். இது ஒரு தவறான செயலாகும், சிலுவைப்போரை தொடங்கச் சொன்ன போப் யூதர்களை தாக்குங்கள் என்று சொல்லவும் இல்லை, கட்டளையிடவும் இல்லை. இயேசுவை சிலுவையில் அறைந்தது யூதர்கள் என்ற தவறான கருத்தை நம்பிக்கொண்டு, சிலர் இந்த காரியத்தைச் செய்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோதே அனைவரையும் மன்னித்துவிட்டார் என்பதை இவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை, கிறிஸ்தவ இறையியலையும் இவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை.
முதல் சிலுவைப்போரை துவக்கிய போப் அர்பன் II என்பவரும், அவருக்கு பிறகு வந்த போப்புக்களும், யூதர்கள் மீதான இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தார்கள். சிலுவைப்போராளிகளில் சிலர் யூதர்களை தாக்கும் போது, அவர்களை காக்க அந்த பகுதியில் இருந்த ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவ குருமார்கள் அதனை தடுக்க தங்களால் இயன்ற முயற்சியைச் செய்தார்கள், ஆனால் நிலைமை கையைவிட்டு போய்விட்டதால், அதிகமாக இவர்களின் முயற்சி பயன்படவில்லை.
இதேபோல், இரண்டாம் சிலுவைப் போரின் தொடக்க கட்டத்தின்போது, சிலுவைப்போராளிகளில் இருந்த சில துரோகிகள் ஜெர்மனியில் யூதர்களை கொலை செய்தனர், இவர்களை புனித பெர்னார்ட் தடுத்து நிறுத்தி யூதர்களை கொல்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
சிலுவைப்போராளிகள் சிலரின் தவறான கோபத்தினால் உண்டான விளைவு தான் யூதர்களை கொலை செய்தது. யூதர்களையோ, மற்ற மக்களை கொல்வதோ சிலுவைப்போர்களின் நோக்கங்கள் அல்ல. தங்கள் கைகளில் ஆயுதம் உண்டு என்ற மமதையில் சிலர் சிலுவைப்போர்களின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராக செயல்பட்ட நிகழ்ச்சிகள் தான் இவைகள்.
இந்த பரிதாப நிலையை புரிந்துக்கொள்ளவேண்டுமென்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன், இரண்டாம் உலகப் போரின்போது சில அமெரிக்க வீரர்கள் வெளிநாடுகளில் இருந்தபோது குற்றங்களைச் செய்தனர். அந்தக் குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். ஆனால் இரண்டாம் உலகப் போரின் நோக்கம் வெளிநாடுகளில் சென்று குற்றங்கள் செய்யுங்கள் என்பதாக இருக்கவில்லை, ஆனால் சிலர் நோக்கங்களை மறந்தார்கள். இதே போன்று தான், நோக்கங்களை மறந்த சிலுவைப்போர் வீரர்கள் இப்படி யூதர்களையும் கொன்று அழித்தனர்.
தவறான புரிதல் 6:
முதல் சிலுவைப்போராளிகள் (கி.பி. 1099) எருசலேமைக் கைப்பற்றியபோது, வீதிகளில் கணுக்கால் அளவு இரத்தம் ஓடும் அளவிற்கு, எருசலேம் நகரின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும், குழந்தைகளையும் கொலை செய்தனர்.
சிலுவைப்போர்களை விமர்சிக்க விரும்புகிறவர்கள் இந்த குற்றசாட்டை முன்வைப்பார்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிங்டன், ஒரு மேடையில் பேசும் போது இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டார். குருசேடர்கள் எருசலேமை பிடித்த போது, எருசலேம் தெருக்களில் கணுக்கால் அளவு இரத்தம் ஓடும்படி எல்லோரையும் கொன்றார்கள் என்றுச் சொன்னார்.
சிலுவைப்போராளிகள் எருசலேம் நகரை கைப்பற்றிய பின்னர் பலர் கொல்லப்பட்டனர் என்பது உண்மை தான். ஆனால் இதை வரலாற்று சூழலில் (Historical Context) புரிந்து கொள்ள வேண்டும். நவீன ஐரோப்பிய மற்றும் ஆசிய காலத்திற்கு முந்தைய காலத்தின் போர் நியமங்களின் படி,ஒரு நாடு வேறு ஒரு நகரத்தை முற்றுகையிடும் போது, அந்த நகரத்தார்கள், அமைதியான முறையில் அடிபணிந்துவிட்டால், சண்டையில்லாமல் அந்த நகரத்தை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அந்த நகரத்தார் எதிர்த்தால் அவர்களை கடைசியாக வெற்றிக்கொள்பவர்களுக்கு அவர்கள் சொந்தமாவார்கள்.
அந்த நகரத்தின் கட்டிடங்கள் மற்றும் பொருட்கள் மட்டுமல்ல, மக்களும் வெற்றிக்கொள்பவர்களுக்குச் சொந்தமாவார்கள். அதனால் தான் ஒரு நகரம் அல்லது கோட்டை முற்றுகையிடப்படும் போது, அந்த நகரத்தார்கள் எதிராளியிடம் சரணடைந்து உயிரோடு வாழ்வதா அல்லது சண்டையிட்டு மாள்வதா என்பதை புத்திசாலிதனமாக பரிசீலித்து முடிவு எடுக்கவேண்டும். தங்கள் இராணுவ பலத்தை கணக்கில் கொண்டு செயல்படவேண்டும். ஒருவேளை நம் இராணுவத்தால் அவர்களை ஜெயிக்கமுடியாது என்று கண்டுபிடிக்கப்பட்டால், உடனே முற்றுகையிட்ட நாட்டிடம் சமரசம் பேசி, சில நிபந்தனைகளில் கையெழுத்து இட்டு, சரணடையவேண்டும். இது தான் அக்கால போர் நியமங்களாக இருந்தன (இதையே முஹம்மதுவும் செய்தார், இஸ்லாமுக்கு அடிபணிகின்றாயா? அல்லது எங்களிடம் மாண்டு மடிகிறாயா? என்று கேட்டு செய்ல்பட்டார். ஒரு நபியாக இருந்து இப்படி நடந்துக்கொண்டது தான் ஜீரணிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது).
முதல் சிலுவைப்போரின் போது, எருசலேமை அவர்கள் முற்றுகையிட்டபோது, அவர்களிடம் சரணடைய முஸ்லிம்கள் மறுத்துவிட்டனர். எருசலேமின் மதில் சுவர்களை தகர்த்துக்கொண்டு அவர்கள் வரமுடியாது, அச்சுவர்கள் தங்களை பாதுகாக்கும் என்று நம்பினர். மேலும், அதற்குள் எகிப்திலிருந்து தங்களுக்கு உதவி வரும் என்று நம்பினர். இந்த இடத்தில் தான் முஸ்லிம்கள் தவறு செய்தனர். நடந்தது என்ன? எருசலேமை சிலுவைப்போராளிகள் கைப்பற்றினர். எருசலேம் நகரில் பலர் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் பணம் கொடுத்து மீட்கப்பட்டனர் அல்லது விடுதலையாகிச் சென்றனர். நவீன தரத்தின்படி இதனை பார்த்தால், இது ஒரு மிருகத்தனமான செயலாகத் தோன்றும். ஆனால், நவீன கால யுத்த ஆயுதங்களினால் உண்டாகும் விளைவுகள், அக்கால வாள்வீச்சு கொலைகளைவிட அதிகமாக இருப்பதை மறுக்கமுடியாது.
ஒன்றை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும், சிலுவைப்போராளிகள் எருசலேமுக்கு வரும் வழியில் இருந்த இஸ்லாமிய நாடுகள், பட்டணங்கள் இவர்களை எதிர்க்காமல் வழி விட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பட்டணங்களை சிலுவைப்போராளிகள் தாக்கவில்லை, அவர்கள் சொத்துக்களை அபகரிக்கவில்லை, அவர்கள் பழைய படியே சுதந்திரமாக தங்கள் அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
எருசலேம் நகரத்தின் தெருக்களில் கணுக்கால் அளவு இரத்தம் ஓடியது என்று சொல்லப்படும் விமர்சனத்தை எந்த ஒரு சரித்திர ஆசிரியரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் அது மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட கூற்றாகும். ஏனென்றால், எருசலேம் ஒரு பெரிய நகரம். அந்த நகரத்தின் தெருக்களில் குறைந்தபட்சம் மூன்று இன்சு அளவு இரத்தம் தொடர்ந்து ஓடியது என்றுச் சொல்லவேண்டுமென்றால், பல லடசம் பேர் கொல்லப்படவேண்டும், மேலும், அந்த நகரத்தில் அன்று இருந்த மக்களைக் காட்டிலும் அதிகமான மக்களை வெளியே இருந்து கொண்டு வந்து, கொன்று இருக்கவேண்டும். இது சாத்தியமான கூற்றாக தெரிகின்றதா?
மேடை பேச்சுக்காகவும், விமர்சனம் வைக்கவேண்டுமென்பதற்காகவும் நடந்த உண்மையை அப்படியே சொல்லாமல் மிகைப்படுத்திச் சொல்லபட்டது தான் இந்த கூற்று என்று நமக்கு தெரிகின்றதல்லவா!
முடிவுரை:
இந்த கட்டுரையில் சிலுவைப்போர்கள் பற்றிய ஆறு தவறான புரிதல்களைப் பற்றி கண்டோம். மேலும் பல கேள்விகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.
குறிப்பு: சிலுவைப்போர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவே இந்த தொடர்கள் எழுதப்படுகின்றன. சிலுவைப்போர்களை நான் ஆதரிக்கவில்லை, இயேசுவின் போதனைகளுக்கு எதிராக நடந்த ஒன்றை எப்படி ஒரு கிறிஸ்தவன் ஏற்றுக் கொள்ளமுடியும்?
சரித்திர ஆசிரியர் தாமஸ் எஃப் மத்தன் (Thomas F. Madden) என்பவரின் பதில்களிலிருந்து இந்த இக்கட்டுரையின் ( Crusade Myths ) விவரங்கள் எடுக்கப்பட்டன.
தேதி: ஜனவரி 14, 2020


Comments