முஸ்லிம்கள் இயேசுவை நேசிக்கிறார்களா?
- TamilChristians Admins

- Apr 23, 2017
- 2 min read
ஆசிரியர்: ஆலன் ஸ்லெமன்
முஸ்லிம்கள் கூட இயேசுவை நேசிக்கிறார்கள். இந்த விளம்பரப்பலகை இப்படித் தான் சொல்கிறது. இங்கு ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், ‘எந்த இயேசுவை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்?’ என்பதாகும்.
இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றி நற்செய்தி நூல்களில் விவரித்துள்ளார்கள். இவர்கள் இயேசுவோடு நடந்தார்கள், அவரோடு உட்கார்ந்து சாப்பிட்டார்கள், அவரோடு பேசினார்கள், அவர் செய்த அற்புதங்களை தங்கள் கண்களால் கண்டார்கள். அவர்கள் இயேசுவை முழுவதுமாக அறிந்திருந்தார்கள்.
இதே போல, இயேசுவிற்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்-ஆனிலும் இயேசுவைப் பற்றி சிறிது விவரிக்கப்பட்டுள்ளது. குர்-ஆனின் ஆசிரியருக்கு உண்மையான இயேசு யார் என்று தெரியாது, அவர் இயேசுவை பார்த்ததும் இல்லை, இயேசு வாழ்ந்த இடத்திலும் காலத்திலும் அவர் வாழ்ந்தது இல்லை.
இதன் அடிப்படையில் பார்த்தால், குர்-ஆன் சொல்லும் இயேசுவும் பைபிள் விவரிக்கும் இயேசுவும் வித்தியாசமானவர்கள். முஸ்லிம்கள் விளம்பரப்படுத்திய அந்த வாசகம், மக்களை குழப்புவதாக உள்ளது. கிறிஸ்தவர்கள் நம்பும் அதே இயேசுவை நாங்களும் நம்புகிறோம் என்ற பொய்யான அறிக்கையை அவர்கள் பதித்து இருந்தார்கள்.
ஆனால் உண்மையென்ன? பைபிளின் இயேசு ‘தேவ குமாரனாக இருக்கிறார், திரித்துவத்தின் இரண்டாம் நபராக இருக்கிறார், அவர் சிலுவையில் அறையப்பட்டார், மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார், மனித இனத்தின் பாவநிவர்த்தியாக இருந்தார்’. குர்-ஆனின் இயேசு எப்படிப்பட்டவர்? குர்-ஆன் இயேசுவின் திரித்துவ தெய்வீகத்தையும், அவரது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பாவநிவர்த்தியை மறுக்கிறது. இவைகள் வெறும் மேலோட்டமான வித்தியாசங்கள் என்று கருதக்கூடாது, இவைகள் அடிப்படை வித்தியாசங்களாகும். கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுத்தால், நீங்கள் உண்மையான இயேசுவை மறுதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
குர்-ஆன் ஒரு வித்தியாசமான இயேசுவை குறிப்பிடுகிறது என்பது மட்டுமல்ல, அது இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட இயேசுவை செதுக்கியுள்ளது. புதிய ஏற்பாட்டின் ஆய்வுகளைச் செய்த அறிஞர் ‘கிரைக் இவான்ஸ்’ கீழ்கண்டவாறு கூறுகின்றார்:
‘குர்-ஆனின் விவரங்கள் அனைத்தும் கிறிஸ்தவ யூத மூலங்களின் மீது சார்ந்துள்ளது. . . . மேலும், இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட விவரங்களை அது வெளிப்படுத்துகிறது. குர்-ஆன் சொல்லும் விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமான மூல நூல்களிலிருந்து எடுக்கப்படவில்லை’.
என்னை தவறாக புரிந்துக்கொள்ளாதீர்கள். முஸ்லிம்கள் இயேசுவை நேசித்தால், அதனை நான் எதிர்ப்பவனல்ல. முஸ்லிம்கள் உண்மையான இயேசுவை நேசிக்கவேண்டும், அவரது போதனைகளின் படி நடக்கவேண்டும், அவர் கொடுத்த இரட்சிப்பை பெற்றுகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு அவர்கள் ‘சரித்திரம் பறைசாற்றும் உண்மையான இயேசுவை நேசிக்கவேண்டும், குர்-ஆன் சொல்லும் கிறிஸ்துவை அல்ல’. சரித்திரம் சொல்லும் இயேசுக் கிறிஸ்து உண்மையானவர், குர்-ஆன் சொல்லும் இயேசு ஒரு கற்பனை கதாபாத்திரமானவார்.
முஸ்லிம்கள் பைபிள் சொல்லும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன, அவைகளை அவர்கள் கவனிக்கவேண்டும். அதாவது, முஸ்லிம்கள் அதிகாரமுள்ளது என்று நம்பும் குர்-ஆன், நற்செய்தி நூல்கள் அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் என்றுச் சொல்கிறது. இதே போல, தோரா மற்றும் சங்கீதமும் தெய்வீக வெளிப்பாடுகள் என்றும் சொல்கிறது. குர்-ஆனுக்கு சமமான இடத்தில் இன்ஜிலை (நற்செய்தி நூல்களை) வைத்து குர்-ஆன் கௌரவிக்கிறது. முஸ்லிம்கள் இரண்டு வெளிப்படுகளையும் நம்பவேண்டும் என்றும் (ஸுரா 29:46), இவைகளுக்கு இடையே வேறுபாடுகளை காட்டமாட்டோம் என்றும் நம்பவேண்டும் என்று குர்-ஆன் சொல்கிறது (ஸூரா 2:136).
முஸ்லிம்கள் இப்படிப்பட்ட குர்-ஆன் வசனங்களை ஆய்வு செய்யாமல், முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று அறியாமையில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கை, குர்-ஆன் சொல்லும் போதனையல்ல, இது இவர்களின் சுயமான கற்பனையாகும். முஹம்மதுவிற்கு பிறகு, 400 ஆண்டுகள் வரை, எந்த ஒரு இஸ்லாமிய அறிஞர் கூட ‘பைபிள் மாற்றப்பட்டுவிட்டது’ என்று சொன்னது கிடையாது. அதன் பிறகு வந்த முஸ்லிம் சமுதாயத்தில், ‘முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டது’ என்ற தவறான கருத்து வேரூன்றிவிட்டது. ஆனால், இதற்கு அவர்களின் அதிகார பூர்வமான குர்-ஆனின் அங்கீகாரம் இல்லை. முஸ்லிம்கள் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களை நான் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளேன் (The Ambassador’s Guide to Islam).
பொதுவாக சொல்வதென்றால், ‘யார் வேண்டுமென்றாலும் நான் இயேசுவை நேசிக்கிறேன் என்று சொல்லமுடியும்’. ஆனால், அவர்கள் எந்த இயேசுவை நேசிக்கிறார்கள் என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது. யெகோவா விட்னஸ் என்றுச் சொல்லக்கூடியவர்கள் கூட ‘நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம்’ என்றுச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் படி ‘இயேசு ஒரு தேவதூதன் ஆவார் (archangel Michael)’. மர்மோன்கள் என்ற இன்னொரு கூட்ட மக்கள்கூட நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம் என்றுச் சொல்கிறார்கள், ஆனால், அவர்கள் ‘இயேசு சின்ன கடவுள் (god not God)’ என்றுச் சொல்கிறார்கள். இதே போலத்தான் முஸ்லிம்கள் கூட நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம் என்றுச் சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் சொல்லும் இயேசு ஒரு மனிதனாக உள்ளார், மேலும் மோசேயைப் போலவும், முஹம்மதுவைப் போலவும் வெறும் நபியாக இருக்கிறார் என்று மட்டுமே அவர்கள் நம்புகிறார்கள். இவர்களின் இக்கூற்றுக்கள் அனைத்தும் உண்மை இயேசுவை மறுதலித்த நம்பிக்கைகள்.
இயேசுவை நாங்கள் நேசிக்கிறோம் என்றுச் சொல்வது, முஸ்லிம்களுக்கு ஒரு பேஷனாகிவிட்டது. ஆனால், உண்மையான இயேசுவை நேசிப்பது தான் சரியான நம்பிக்கையாகும்.
நான் மேலே குறிப்பிட்ட அந்த விளம்பரப்பலகை மக்களை தவறாக திசை திருப்புவதாக உள்ளது. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் அந்த பொய்யான விளம்பரத்தை அடிப்படையாக வைத்தே தங்கள் உரையாடல்களை புரியலாம். கடைசியாக, இயேசுவை நேசிக்கிறோம் என்றுச் சொல்லக்கூடிய முஸ்லிம்களை, நற்செய்தி நூல்கள் வெளிப்படுத்தும் இயேசுவிடம் கொண்டுவரவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாக உள்ளது.
Author: Alan Shlemon – A speaker for Stand to Reason
To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon
Translation: Answering Islam Tamil Team


Comments